Friday, 10 February 2017

மெய்நிகர் கற்றல் ( VLE FROG )

மெய்நிகர் கற்றல் (vle frog) தளத்தின் வழி தமிழ்மொழியில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் உத்திகள்
அறிமுகம்


தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப எல்லா துறையும் பல மாற்றங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் காலமாகத்  தற்காலம் திகழ்கிறது. இம்மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தன்னை வளர்த்துக் கொள்பவர்கள் வெற்றிப் பெற்றவர்களாகவும் மாற்றங்களை ஏற்க மறுக்கிறவர்கள் பின்தங்கியவர்களாகவும் கருதப்படுகின்றனர். இது கல்வித்துறைக்கும் விதிவிலக்கல்ல. இன்றைய இந்த நவீன வளர்ச்சி, வகுப்பறையில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கற்றலையும் கற்பித்தலையும் எளிமைப்படுத்துவனவாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.  இதையறிந்து தமிழ்ப்பள்ளியில் தமிழாசிரியர்கள் தமிழ்மொழியில்  கற்றல் கற்பித்தலை எளிமையாகவும் ஆர்வத்துடனும் மெய்நிகர் கற்றல் தளத்தின் வழி போதிக்கலாம் என்பதைக் குறித்தே இவ்வாய்வு விளக்குகிறது.




மெய்நிகர் கற்றல் (vle frog)


மெய்நிகர் கற்றல் (vle frog) தளம் என்பது அதிநவீன கற்றல் கற்பித்தலை மாணவர்களுக்கு மேற்கொள்ளக்கூடிய ஒரு தளமாகும். கற்றல் கற்பித்தலைப் பல்வகைப்படுத்தி மாணவர்களை ஆர்வத்துடன் செயல்பட வைக்கும் வண்ணம் இத்தளத்தை மலேசியக் கல்வி அமைச்சு உருவாக்கியுளளது. இத்தளம் இணையத் தொடர்புடன் நடத்தப்படக்கூடியதாகும்.  இத்தளத்தைக் கொண்டு கற்றல் கற்பித்த்லை மேற்கொள்ள மலேசியக் கல்வி அமைச்சு நவீன முறையில் தயாரிக்கப்பட்ட chrome Lab மற்றும் Yes 4G இணையத்தைப்  பல பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது. இந்தchrome Lab – இல் 41 Chrome bookஅடங்கியிருக்கும். அதனுடைய மின்கலனானது 6 மணி நேரம் பயன்படுத்தக் கூடியதாகவும் அமைக்கப்பெற்றிருக்கிறது. ஆகவே,வகுப்பறையில் கற்றல் கற்பித்தலின் போது ஒரே நேரத்தில் 41 மாணவர்கள் அதிவேக இணையத் தொடர்புடன் மெய்நிகர் கற்றலில் ஈடுபடலாம். மலேசியாவில் இருக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தனித்தனி vle frog தளம் கல்வி அமைச்சால் தயார் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பள்ளி URL மூலம் வழங்கப்பட்டிருக்கும் பயனர்பெயர் (yes id) மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு தங்களின் தளத்திற்குள் நுழையலாம்.


ஆசிரியரின் பயன்பாடு

ஓர் ஆசிரியரானவர் மெய்நிகர் கற்றலின்வழி கற்பித்தலை முழுமையாக மேற்கொள்ள முடியும். எளிமையான முறையில் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டிய வசதிகள் அனைத்தும் இந்த மெய்நிகர் கற்றலானது அடக்கியுள்ளது. ஆசிரியர் தனக்கென்று ஒரு பக்கத்தை (site) உருவாக்கிக்கொண்டு தனது கற்றல் கற்பித்தலுக்குத் தேவையான நிரல்பலகைகளை (widgets) இழுத்துத் (drag) தன் பக்கத்தில் வைப்பதன் மூலம் குறுஞ்செயலிகளை இலகுவாகப் பயன்படுத்தலாம்.  

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்கள் மேலே காணப்படும் எல்லாவற்றையும் பயன்படுத்த தேவையில்லை அஃதில் இருக்கின்ற 6 நிரல்பலகைகாளைப் பயன்படுத்தினாலே போதும். அவை Embed Website, External Link, Media, Text, Text Activity மற்றும் Quiz.

Embed Website  (உட்பொதி இணையத்தளம்)

கற்றல் கற்பித்தலுக்குத் தொடர்பான திறமுனைச் செயலிகளை (power point presentation) ஆசிரியர் இத்தளத்தில் பதிவேற்றலாம்.  திறமுனைச் செயலிகள் அனைத்தையும் google drive – இல் பதிவேற்றம் செய்து, இங்கு இணைப்புக் கொடுப்பதன் வழி ஆசிரியர் படைப்புகளை எளிமையாகப் பகிர்ந்துகொள்ள முடியும். மேலும் வலைப்பதிவுகளையோ அல்லது இணையத்தளங்களையோ இப்பக்கத்திற்குள் அடக்க இந்நிரல்பலகையால் இயலும். 


External Link (வெளி இணைப்பு)

இந்நிரல்பலகை வழி வலைப்பதிவுகளையோ இணையத்தளங்களையோ நாம் இங்கு இணைப்புக் (link) கொடுக்கலாம். இவ்விணைப்புகளை மாணவர்கள் சொடுக்குவதன் மூலம், மெய்நிகர் கற்றல்(vle) தளத்திலிருந்தே தேவையான  வலைப்பதிவுகளையோ அல்லது இணையத்தளங்களையோ மாணவர்கள் படித்துப் பயன் பெறலாம். 


Media (ஊடகம்)

ஆசிரியர்களுக்கு அதீதப் பயனைத் தரவல்லதாக இநிரல்பலகை அமையும். இந்நிரல்பலகை வாயிலாக ஆசிரியர் கற்றல் கற்பித்தல் தொடர்பான படங்கள்,காணொளிகள் போன்றவற்றைப் பதிவேற்றம் செய்து மாணவர்களைக் காண வைக்கலாம். மேலும், ஆசிரியர் பள்ளிக்கு வர இயலாத காலங்களில் கூட,மாணவர்கள் அன்றைய கற்றல் கற்பித்தலை சம்மந்தப்பட்ட ஆசிரியருடன் இணைந்தே மேற்கொள்ள இந்நிரல்பலகை உறுதுணையாக இருக்கும். ஆம், ஆசிரியர்http://webcamera.io/ வழியாகப் பாடம் தொடர்பான விளக்கங்களையும் கட்டளைகளையும் இவ்விணையத்தளம் வழி  காணொளியாகப் பதிவு செய்யலாம். பதிவு செய்ததை இந்நிரல்பலகை மூலம் பதிவேற்றுவது ஆசிரியருக்கும் மாணவருக்கும் பயனாக அமையும். அதுமட்டுமின்றி கூடுதல் வகுப்புகளைப் பள்ளியில் நடத்த வேண்டிய அவசியத்தையும் இந்நிரல்பலகையானது உடைத்தெறிகிறது. கூடுதல் வகுப்புகளின்றி மாணவர்கள் ஆசிரியரின் காணொளிகள் மூலமாகவும் கூடுதல் விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவும் வழிவகுக்கிறது.


Text (எழுத்து)

இந்நிரல்பலகையானது ஆசிரியர் எழுத்து வடிவில் மாணவர்களுக்குக் கட்டளையிடுவதற்கோ பனுவல் ஒன்றனைத் தட்டச்சு செய்வதற்கோ பயன்படுத்துவதாகும். தமிழில் தட்டச்சு செய்வதற்கான மென்பொருள்களை ஆசிரியர் கொண்டிருக்காவிடில் Google transliteration(https://www.google.com/intl/ta/inputtools/try/) எனும் இவ்விணையத்தளம் வழி தட்டச்சு செய்து அதனை அப்படியே இந்நிரல்பலகையில் வெட்டி, ஒட்டிக் கொள்ளலாம்.


Text Activity (எழுத்துப் பயிற்சி)

இந்நிரல்பலகையை மாணவர்கள் எழுத்துப் பயிற்சி செய்யவோ அல்லது பதில் அளிக்கவோ பயன்படுத்தலாம். மாணவரிடமிருந்து பதில் பெற வேண்டுமாயின் மட்டுமே  ஆசிரியர் இந்நிரல்பலகையைப் பயன்படுத்த முடியும். மாணவர்கள் அளிக்கின்ற பதில்கள் யாவும் ஒப்படைப்பாகத்தான் (assignment) ஆசிரியரால் பெற்றுக்கொள்ள முடியும். இதில் மாணவர் மட்டுமே தட்டச்சு செய்ய இயலுமே தவிர ஆசிரயரால் தட்டச்சு செய்ய இயலாது.


Quiz (புதிர் போட்டி)

இந்நிரல்பலகையைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கலாம். இது புதிர்போட்டி போன்ற வடிவில் இருப்பதால் ஆசிரியர் புதிர்போட்டியாகவும் மாணவர்களுக்கு வழங்கலாம். இதில் கேள்விகளை ஆசிரியர் தட்டச்சு செய்தாலே போதும்.அதுவே, நாம் தேர்ந்தெடுக்கும் வகைக்கு ஏற்றவாறு கேள்விக்கான வடிவத்தை உருவாக்கிக் கொடுக்கும்.
இங்கு 10 வகை கேள்வி தயாரிக்கும் முறை இருந்தாலும், கற்றல் கற்பித்தலுக்கு ஏற்புடைய மதிப்பீட்டு முறையை ஆசிரியர் தேர்ந்தேடுத்துக் கேள்விகளை எளிமையாகத் தயாரிக்கலாம். மொழிப்பாடங்களுக்குMultiple choice, Free Text, True False, Picture Choice, Ordering மற்றும் Fill in the blanksஆகியவையை பயன்படுத்தக்கூடியதாக அமையும். இந்நிரல்பலகையானது, ஆசிரியர்கள் பயிற்சி புத்தகங்களைத் திருத்துவது குறைந்து அனைத்தையும் இத்தளத்திலேயே வழங்கி திருத்தும் வசதியையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.



மாணவர்களின் பயன்பாடு
கணினியைப் பயன்படுத்தி கற்றலை மேற்கொள்ள விரும்பாத மாணவர்கள் இருக்கவே முடியாது என்பதை ஆய்வுக்குரிய நான்காம் ஆண்டு மாணவர்கள் வழி கண்டறியமுடிந்தது. அதுமட்டுமின்றி கூலிம் வட்டாரத்தில் அமைந்துள்ள 18 தமிழ்பள்ளிகளில் 5 தமிழ்ப்பள்ளிகளில் இவ்வாய்வுக்காகக் கணக்கெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், 169 மாணவர்களில் 153 மாணவர்கள் மெய்நிகர் கற்றலின் வழி நடத்தப்படும் கற்றல் கற்பித்தல் எளிமையாகவும் தங்களின் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் அமைந்திருப்பதாகவும் பதிலளித்துள்ளனர்.


ஆய்வுக்கு உட்பட்ட ஆய்வாலரின் நான்காம் ஆண்டு மாணவர்கள் தமிழ்மொழிப் பாடவேளையில் தங்களுடைய பக்கத்திற்குச் சென்று ஆசிரியர் வழங்கியிருக்கும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளைக் மேற்கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், வழங்கப்படும் பயிற்சிகளையும் விரைவாகச் செய்து அனுப்பி விடுகின்றனர். அதுமட்டுமின்றி,மாணவர்கள் Google Transliteration(https://www.google.com/intl/ta/inputtools/try/)  வழி மெய்நிகர்கற்றலில் (vle frog) தமிழிலே பயிற்சிகளைத்  தட்டச்சு செய்து அனுப்புவது தமிழ்மொழியில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்வது எளிமை என்பதை இதன்வழி கண்டறியவும் முடிகிறது. மாணவர்களும் பயிற்சி புத்தகங்களில் பாடங்கள் செய்து அனுப்புவது குறைந்து, இத்தளத்திலேயே பயிற்சிகளை மேற்கொண்டு விடைகளைச் சரி பார்த்து ஆசிரியரின் அறிவுரையையும் பெறுகின்றனர்.


பெற்றோர்களின் பயன்பாடு


இம்மெய்நிகர் கற்றலானது, ஆசிரியர் மற்றும் மாணவர் மத்தியில் உள்ள உறவை மேம்படுத்துவதோடு, பெற்றோர்களும் மாணவர்களின் அன்றாட கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் பங்கு கொள்ளுமாறும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெற்றோர்கள் தம் குழந்தைகள் அன்றாடம் செய்கின்ற பயிற்சிகளைத் தங்களுக்கென்று வழங்கப்பட்டிருக்கும் பயனர்பெயர் (yes id) மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு தங்களின் தளத்திற்குள் நுழைவதன் வழி கண்காணிக்கலாம். இந்த அவசர உலகில் இதற்காக, பெற்றோர்கள் கணினியை நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தங்கள் குழந்தைகள் பாடங்களை செய்திருக்கிறார்களா என்று அன்றாடம் புத்தகங்களைச் சரி பார்க்கவும் அவசியமில்லை. தங்களின் திறன்பேசி மூலமாகவே அறிந்து கொள்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது நமது கல்வி அமைச்சு. Anroid வசதி பொருத்தப்பட்ட எல்லா திறன் பேசிகளிலும் இணையத் தொடர்புடன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அன்றாடம் செய்கின்ற  பயிற்சிகளைக் காணலாம். இதற்காகப் பெற்றோர்கள் செய்ய வேண்டியது google playstoreமூலமாக Frog Assignment எனும் குறுஞ்செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்வதுதான். பதிவிறக்கம் செய்த பிறகு, தங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளியின் url –ஐ தட்டச்சு செய்து தங்களுக்கென்று வழங்கப்பட்டிருக்கும் பயனர்பெயர் (yes id) மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு தங்களின் தளத்திற்குள் நுழையலாம். முதல் முறை பதிவு செய்தாலே போதுமானது. அதன்பின் பெற்றோர்கள் ஒவ்வொரு முறையும் இக்குறுஞ்செயலியை அழுத்துவதன் மூலம் கடவுச்சொல்லின்றி நேரடியாகவே மாணவரின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கலாம். இக்குறுஞ்செயலியை ஆசிரியர்களும் மாணவர்களின் பயிற்சிகளைத் திருத்துவதற்குப் பயன்படுத்தலாம் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.


முடிவுரை


இன்றைய கற்றல் கற்பித்தலும்,  தகவல் தொடர்புத் தொழில் நுட்பமும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது என்றால் அது சொல்லத்தகுந்ததே. தற்கால கல்வி என்பது தொழில்நுட்பச் சேர்க்கை இல்லாமல் வலுப்படாது என்றாகிவிட்டது. அவ்வகையில் கல்வியமைச்சால் அங்கீகரிக்கப்பட்டு அனைத்துப் பள்ளிகளும் பயன்படுத்தும் வண்ணம் அமையப்பெற்றிருக்கின்ற இந்த மெய்நிகர் கற்றல் தளம், (vle frog)தமிழாசிரியர்கள் எளிமையாகத் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தக் கூடியது என்பதை இவ்வாய்வானது காட்டியுள்ளது. பள்ளி ஆசிரியர்களால் கற்றல் கற்பித்தலில் கையாளப்படும் இத்தகைய புதிய அணுகுமுறைகள் சிறந்த வருங்கால தலைமுறையை உருவாக்க முடியும் என்பது சாத்தியமே....

நன்றி. PGB ST KEDAH வாட்ஸாப் குரூப்

No comments:

Post a Comment